←அத்தியாயம் 19: சமயசஞ்சீவி

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: தாயும் மகனும்

அத்தியாயம் 21: "நீயும் ஒரு தாயா?"→

 

 

 

 

 


418பொன்னியின் செல்வன் — கொலை வாள்: தாயும் மகனும்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

கொலை வாள் - அத்தியாயம் 20[தொகு]
தாயும் மகனும்


அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற் சிறந்த அந்த மூதாட்டியின் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. ஒரு காலத்தில் மதுராந்தகனும் அன்னையிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தான். இப்போது அந்தப் பக்தி, கோப வெறியாக மாறிப் போயிருந்தது. பெற்ற மகனுக்குத் துரோகம் செய்து, தாயாதிகளின் கட்சி பேசிய தாயைப்பற்றிக் கதைகளிலே கூடக் கேட்டதில்லையே! தனக்கு இப்படிப்பட்ட அன்னையா வந்து வாய்க்கவேண்டும்?... இதை நினைக்க நினைக்க அவன் உள்ளத்திலிருந்த அன்பு அத்தனையும் துவேஷமாகவே மாறி நாளடைவில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்தது. 
அபூர்வமான சாந்தம் குடிகொண்ட அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் அவனுடைய கோபம் தணிந்தது. பழைய வழக்கத்தை அனுசரித்து நமஸ்கரித்து எழுந்து நின்றான். "சிவபக்திச் செல்வம் பெருகி வளரட்டும்!" என்று மகாராணி ஆசி கூறி, அவனை ஆசனத்தில் உட்காரச் செய்தார். அந்த ஆசீர்வாதம் மதுராந்தகனுடைய மனத்தில் அம்பைப் போல் தைத்தது. 
"மதுராந்தகா! என் மருமகள் சுகமா? உன் மாமனார் வீட்டிலும், தனாதிகாரியின் வீட்டிலும் எல்லோரும் சௌக்கியமா?" என்று அன்னை கேட்டார். 
"எல்லாரும் சௌக்கியமாகவே இருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை?" என்று குமாரன் முணுமுணுத்தான். 
"தஞ்சையிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீ சக்கரவர்த்தியைப் பார்த்தாயா? அவருடைய உடல் நலம் தற்சமயம் எப்படியிருக்கிறது?" என்று மகாராணி கேட்டார். 
"பார்த்து விடை பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டேன். சக்கரவர்த்தியின் உடம்பு நாளுக்கு நாள் நலிந்துதான் வருகிறது. உடல் வேதனையைக் காட்டிலும் மனவேதனை அவருக்கு அதிகமாயிருக்கிறது" என்றான் மதுராந்தகன். 
"அது என்ன, குழந்தாய்? சக்கரவர்த்தி மன வேதனைப்படும்படியாக என்ன நேர்ந்தது?" 
"குற்றம் செய்தவர்கள், - அநீதி செய்தவர்கள்... பிறர் உடைமையைப் பறித்து அனுபவிக்கிறவர்கள் - மனவேதனை கொள்வது இயல்புதானே?" 
"இது என்ன சொல்கிறாய்? சக்கரவர்த்தி அவ்வாறு என்ன குற்றம் - அநீதி - செய்துவிட்டார்?" 
"வேறு என்ன செய்யவேண்டும்? நான் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் அவர் இத்தனை வருஷங்களாக அமர்ந்திருப்பது போதாதா? அது குற்றம் இல்லையா? அநீதி இல்லையா?" 
"குழந்தாய்! பால்போலத் தூய்மையாக இருந்த உன் உள்ளத்தில் இந்த விஷம் எப்படி வந்தது? யார் உனக்குத் துர்ப்போதனை செய்து கெடுத்துவிட்டார்கள்?" என்று இரக்கமான குரலில் அன்னை கேட்டார். 
"எனக்கு ஒருவரும் துர்ப்போதனை செய்து கெடுக்கவில்லை. தங்கள் மகனை அவ்வளவு நிர்மூடனாக ஏன் கருதுகிறீர்கள்? எனக்குச் சுய அறிவே கிடையாது என்பது தங்கள் எண்ணமா?" 
"எத்தனை அறிவாளிகளாயிருந்தாலும், துர்ப்போதனையினால் மனம் கெடுவது உண்டு. கரைப்பவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும் அல்லவா? கூனியின் துர்ப்போதனையினால் கைகேயியின் மனம் கெட்டுப் போகவில்லையா?" 
"பெண்களின் மனத்தை அப்படித் துர்ப்போதனையினால் கெடுத்துவிடலாம் என்பதை நானும் தெரிந்து கொண்டுதானிருக்கிறேன்!" 
"மதுராந்தகா! யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறாய்?" 
"தாயே! என்னை, எதற்காக அழைத்தீர்கள். அதைச் சொல்லுங்கள்!" 
"சற்றுமுன் நடந்த வைபவத்தில் நீ பிரசன்னமாய் இருந்தாய் அல்லவா?" 
"இருந்தேன், யாரோ வழியோடு போகிற சிறுவனைப் பல்லக்கிலேற்றி அழைத்து வரச்செய்தீர்கள். சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து உபசரித்தீர்கள். அவன் தலை கால் தெரியாத கர்வம் கொண்டிருப்பான்..." 
"ஐயோ! அப்படி அபசாரமாய்ப் பேசாதே, குழந்தாய். வந்திருந்தவர் வயதில் வாலிபரானாலும், சிவஞான பரிபக்குவம் அடைந்த மகான்...." 
"அவர் மகானாகவேயிருக்கட்டும், நான் குறைத்துப் பேசினால் அவருடைய பெருமை குறைந்துவிடாதல்லவா? அந்த மகானுக்குத் தாங்கள் இராஜரீக மரியாதைகள் செய்ததையும் நான் ஆட்சேபிக்கவில்லை. என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள்!" 
செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். பிறகு கூறினார்:- "உன்னுடைய குணத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் எனக்குப் பிரமிப்பை உண்டாக்குகிறது. பழுவேட்டரையர் மாளிகையில் இரண்டு வருஷ வாசம் இப்படி உன்னை மாற்றிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. போனால் போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்ய வேண்டும். உன் தந்தைக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற என்னாலியன்ற வரையில் முயலவேண்டும் மகனே! உன்னை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், என்னுடைய கதையை, - நான் உன் தந்தையை மணந்த வரலாற்றைக் கூறவேண்டும். சற்றுப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிரு!" 
மதுராந்தகன் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கப் போவதற்கு அறிகுறியாகக் கால்களை மண்டி போட்டுக் கொண்டு, கைகளைப் பீடத்தில் நன்றாய் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான். 
"நான் பிறந்த ஊராகிய மழபாடிக்கு நீ குழந்தையாயிருந்தபோது இரண்டொரு தடவை வந்திருக்கிறாய்; அந்த ஊரில் உள்ள சிவபெருமான் ஆலயத்தையும் பார்த்திருக்கிறாய். கோச்செங்கட் சோழ மன்னர் சிவாலயம் எடுப்பித்த அறுபத்து நாலு ஸ்தலங்களில் அதுவும் ஒன்று எனப் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னுடைய பாட்டனார், என்னுடைய தந்தை, மழபாடியில் பெரிய குடித்தனக்காரர். எங்கள் குலம் தொன்மையானது. ஒரு காலத்தில் மழவரையர்கள் செல்வாக்குப் பெற்ற சிற்றரசர்களாயிருந்தார்கள். விஜயாலய சோழர் காலத்தில் நடந்த யுத்தங்களில் பாண்டியர்களோடு சேர்ந்திருந்தார்கள். அதனால் சோழர்கள் வெற்றி பெற்ற பிறகு மழவரையர்களின் செல்வாக்குக் குன்றியிருந்தது. சிறு பெண்ணாயிருந்தபோது அதைப்பற்றியெல்லாம் நான் குறைப்படவில்லை. என் உள்ளம் மழபாடி ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமான் மீது சென்றிருந்தது. மழபாடியின் சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றை ஒரு பெரியவர் நான் குழந்தையாயிருந்தபோது எனக்குச் சொன்னார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது சீடர்களுடனே எங்களூர்ப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார். மழபாடி சிவாலயத்தைச் சுற்றிச் செழித்து வளர்ந்து கொத்துக் கொத்தாகப் பூத்துக்குலுங்கிய கொன்னை மரங்கள் ஆலயத்தை மறைத்திருந்தனவாம். ஆகையால் கோயிலைக் கவனியாமல் சுந்தரர் சென்றாராம். 'சுந்தரம், என்னை மறந்தாயோ!'- என்ற குரல் அவர் காதில் கேட்டதாம். சுந்தரர் சுற்றும் முற்றும் பார்த்து 'யாராவது ஏதேனும் சொன்னீர்களா?' என்று கேட்டாராம். சீடர்கள், 'இல்லை' என்றார்களாம். தங்கள் காதில் குரல் எதுவும் கேட்கவில்லை என்றும் சொன்னார்களாம். சுந்தரர் உடனே அருகில் ஏதாவது ஆலயம் மறைந்திருக்கிறதா என்று விசாரித்தாராம். கொன்னை மரங்களுக்கிடையில் மறைந்திருந்த மழபாடித் திருக்கோயிலைக் கண்டுபிடித்து, ஓடி வந்து இறைவன் சன்னதியில் "பொன்னார் மேனியனே!" என்ற பதிகத்தைப் பாடினாராம். இந்த வரலாற்றைக் கேட்டது முதற்கொண்டு,


     மன்னே! மாமணியே!
          மழபாடியுள் மாணிக்கமே!
     அன்னே உன்னையல்லால்
          இனி யாரை நினைக்கேனே!


என்ற வரிகள் என் மனத்தில் பதிந்துவிட்டன. கோவிலுக்கு அடிக்கடி போவேன். நடராஜ மூர்த்தியின் முன்னால் நின்று அந்த வரிகளை ஓயாது சொல்லுவேன். நாளாக ஆக, என் உள்ளத்தில் மழபாடி இறைவர் குடிகொண்டுவிட்டார். சிவபெருமானையே நான் மணந்துகொள்ளப் போவதாக மனக்கோட்டை கட்டினேன். என்னை நான் உமையாகவும், பார்வதியாகவும், தாட்சாயணியாகவும் எண்ணிக்கொள்வேன். அவர்கள் சிவபெருமானைப் பதியாக அடைவதற்குத் தவம் செய்ததுபோல நானும் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்வேன். யாராவது என் கலியாணத்தைப் பற்றிய பேச்சு எடுத்தால் வெறுப்பு அடைவேன். இவ்விதம் என் குழந்தைப் பருவம் சென்றது. மங்கைப் பருவத்தை அடைந்தபோது என் உள்ளம் சிவபெருமானுடைய பக்தியில் முன்னைவிட அதிகமாக ஈடுபட்டது. வீட்டாரும், ஊராரும் என்னைப் 'பிச்சி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவேயில்லை. வீட்டில் உண்டு உறங்கிய நேரம் போக மிச்சப் பொழுதையெல்லாம் கோவிலிலேயே கழித்தேன். பூஜைக்குரிய மலர்களைப் பறித்து விதம்விதமான மாலைகளைத் தொடுத்து, நடராஜப் பெருமானுக்கு அணியச்செய்து பார்த்து மகிழ்வேன்! நெடுநேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பேன். இவ்விதம் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் இறைவனையே தியானித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கலகலவென்று சத்தம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன். என் எதிரே ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் முன்னால் நின்ற ஒருவர் மீதுதான் என் கண்களும் கருத்தும் சென்றன. நான் மனத்தில் தியானித்துக் கொண்டிருந்த சிவபெருமான், தாமே தம் பரிவாரங்களுடன் என்னை ஆட்கொள்ள வந்துவிட்டார் என்று எண்ணிக்கொண்டேன். எழுந்து நின்று தலைகுனிந்து வணங்கி நின்றேன். எண் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பொழிந்தது. இதை அவர் கவனித்து இருக்கவேண்டும். 
'இந்த பெண் யார்? இவள் ஏன் கண்ணீர்விட்டு அழுகிறாள்?' என்று ஒரு குரல் கேட்டது. 
அதற்கு என் தந்தையின் குரல், 'இவள் என் மகள். பிஞ்சிலே பழுத்தவளைப் போல் இவளுக்கு இப்போது சிவபக்தி வந்துவிட்டது. ஓயாமல் இப்படிக் கோவிலில் வந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பதிகம் பாடுவதும், கண்ணீர் விடுவதுமாயிருக்கிறாள்!' என்று கூறிய மறுமொழி என் காதில் விழுந்தது. 
மறுபடி நான் நிமிர்ந்து பார்த்த போது, முன்னால் நின்றவர் சிவபெருமான் இல்லையென்றும், யாரோ அரச குலத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு அவமானம் தாங்கவில்லை. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வீட்டை அடைந்தேன். ஆனால் என்னை ஆட்கொண்டவர் என்னை விடவில்லை. என் தந்தையுடன் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார். மகனே! அவர்தான் என் கணவரும், உன் அருமைத் தந்தையுமாகிய கண்டராதித்த தேவர்!" 
இவ்விதம் கூறிவிட்டுப் பெரிய மகாராணி சிறிது நிறுத்தினார். பழைய நினைவுகள் அவருடைய கண்களில் மீண்டும் கண்ணீர்த் துளிகளை வருவித்தன. கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் கூறினார்:- 
"பிறகு உன் தந்தையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் சிறிது காலத்துக்கு முன்புதான் சோழநாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதல் பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். அவருக்குப் பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகி விட்டார். மறுபடி கலியாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. மீண்டும் மணம்புரிந்து கொள்வதில்லையென்று விரதம் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் கண்டதினால் சலனமடைந்தது. என் தந்தையின் முன்னிலையில் என் விருப்பத்தை அவர் கேட்டார். நானோ சிவபெருமானே மனித உருவங்கொண்டு என்னை ஆட்கொள்ள வந்திருப்பதாக எண்ணிப் பரவசம் கொண்டிருந்தேன். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் தெரிவித்தேன். எங்களுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அதன் பயனாக உன் பாட்டனார் இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் அடைந்து 'மழவரையர்' என்ற பட்டப் பெயரையும் பெற்றார்..." 
"மகனே! எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம். அதற்கு ஓர் முக்கியம் காரணம் இருந்தது. குழந்தாய்! இதையெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் கனவிலும் கருதவில்லை. ஆயினும், அத்தகைய அவசியம் நேர்ந்து விட்டதனால் சொல்லுகிறேன். கொஞ்சம் செவி கொடுத்துக் கவனமாகக் கேள்!" இவ்விதம் செம்பியன்மாதேவி கூறி மீண்டும் ஒரு நெடுமூச்சு விட்டார். மதுராந்தகனும் முன்னைக்காட்டிலும் அதிகச் சிரத்தையுடன் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel

Books related to பொன்னியின் செல்வன்


संत तुकाराम अभंग - संग्रह २
चंद्रकांता
रामचरितमानस
भारताचा शोध
वाचनस्तु
The Voyages and Adventures of Captain Hatteras
श्रीनारदपुराण - पूर्वभाग