←அத்தியாயம் 48: 'கலபதி'யின் மரணம்

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: கப்பல் வேட்டை

அத்தியாயம் 50: "ஆபத்துதவிகள்"→

 

 

 

 

 


393பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: கப்பல் வேட்டைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 49[தொகு]
கப்பல் வேட்டை


கலபதியின் உடலையும் மாண்டு போன மற்ற மாலுமிகளின் உடல்களையும் சேர்த்து உலர்ந்த மரக்கட்டைகளை அடுக்கித் தகனம் செய்தார்கள். தீ மூட்டி எரியத் தொடங்கிய போது இளவரசர் முகத்தில் கண்ணீர் பெருகிக் கொண்டிருப்பதைச் சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி கவனித்தார். 
"ஐயா! இந்தப் பாதகர்களின் சாவுக்காகவா கண்ணீர் விடுகிறீர்கள்? தங்களைச் சிறைப்படுத்த வந்த துரோகிகளுக்குக் கடவுளே தக்க தண்டனை அளித்து விட்டார். தாங்கள் ஏன் வருந்தவேண்டும்?" என்றார். 
"சேநாதிபதி! இவர்கள் துரோகிகள் அல்ல; இவர்களுடைய மரணத்துக்காகவும் நான் வருத்தப்படவில்லை. சோழ நாட்டுக்கு இவ்வளவு பொல்லாத காலம் வந்து விட்டதே என்று வருந்துகிறேன்" என்றார். 
"பொல்லாத காலம் பழுவேட்டரையர்களுடனேயே வந்து விட்டது. இப்போது புதிதாக ஒன்றும் வரவில்லையே!" 
"புதிதாகத்தான் வந்திருக்கிறது. கலபதியின் கட்டளையைக் கப்பல் மாலுமிகள் மீறுவது என்று வந்து விட்டால் அதைக் காட்டிலும் ராஜ்யத்துக்கும் கேடு வேறு என்ன இருக்க முடியும்? சேநாதிபதி! இது ஒரு சிறிய அறிகுறிதான்! இதைப் போலவே சோழ ராஜ்யம் எங்கும் பிளவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்! அப்படி ஏற்பட்டால் விஜயாலய சோழர் அஸ்திவாரமிட்ட இந்த மகாராஜ்யம் சின்னா பின்னமாகிவிடுமே! இந்தக் கேடு என்னாலேயா நேரவேண்டும்? மகாபாரதக் கதை கேட்டிருக்கிறேன். துரியோதனன் பிறந்தபோது நரிகளும் ஓநாய்களும் பயங்கரமாக ஊளையிட்டன என்று பாரதம் சொல்லுகிறது. நான் பிறந்தபோதும் அப்படி நரிகளும், நாய்களும் பயங்கரமாக ஊளையிட்டிருக்க வேண்டும்!" என்றார் இளவரசர். 
"ஐயா! தாங்கள் இந்த உலகில் ஜனித்தபோது என்னென்ன நல்ல சகுனங்கள் ஏற்படலாமோ அவ்வளவு ஏற்பட்டன. தங்கள் ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள்..." 
"போதும், சேநாதிபதி! போதும்! இந்தப் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துவிட்டது. என் ஜாதக விசேஷம் இருக்கட்டும். நாம் பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. சேநாதிபதி! தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கப்பல்களிலிருந்து கலபதியின் கட்டளையை மீறிச் சென்ற மாலுமிகள் தங்களிடம் வந்தால் தாங்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. உடனே சிறைப்படுத்தி அவர்களைத் தஞ்சைக்கு அனுப்ப வேண்டும்." 
"இளவரசே! கலபதி கூறியதை மட்டுமே நாம் கேட்டோ ம். மாலுமிகளின் கட்சி என்னவென்று நாம் கேட்கவில்லை. ஒரு பக்கத்துப் பேச்சை மட்டும் கேட்டு எப்படித் தீர்மானிக்க முடியும்? அது நீதிக்கும் தர்மத்துக்கும் உகந்ததா? தாங்கள் என்னுடன் வாருங்கள். அந்த மாலுமிகள் வந்ததும் அவர்கள் சொல்வதையும் கேட்டு முடிவு செய்யுங்கள்..." 
"ஐயா! அது சாத்தியமில்லை. தங்கள் உசிதம் போல் செய்யுங்கள். நான் இனி ஒரு கணமும் இங்கே தாமதிக்க முடியாது. உடனே புறப்பட வேண்டும். படகுக்காரன் எங்கே?" என்று கேட்டார். 
"எங்கே புறப்பட வேண்டும், இளவரசே! படகுக்காரன் எதற்கு?" 
"இதைப் பற்றித் தாங்கள் கேட்கவும் வேண்டுமா? வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பலுக்குத்தான் நானும் போக வேண்டும். அந்த வீராதி வீரன் எனக்காகவல்லவோ அராபியர் வசப்பட்ட கப்பலில் ஏறிப் பயங்கரமான அபாயத்துக்கு உள்ளாகியிருக்கிறான்? அவனை நான் கை விட்டு விடக்கூடுமா? ஏற்கெனவே நான் செய்துள்ள பாவங்கள் போதாதென்று சிநேகத் துரோகம் வேறு செய்ய வேண்டுமா...? 
"ஐயா! தாங்கள் ஒரு பாவமும் நான் அறிந்து செய்ததில்லை. தாங்கள் சொன்னாலும் உலகம் ஒப்புக் கொள்ளாது. வந்தியத்தேவன் வெறும் முரடன். முன் யோசனை சிறிதும் இல்லாதவன். அவனாக வருவித்துக் கொண்ட அபாயத்துக்குத் தாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? இதில் சிநேகத்துரோகம் என்ன? இளவரசே! எங்கிருந்தோ தெறிகெட்டு வந்த ஒரு வாலிபனைத் தங்கள் சினேகிதன் என்று கொண்டாடுவதே எனக்குப் பிடிக்கவில்லை. சம நிலையில் உள்ளவர்கள் அல்லவோ சிநேகிதர்கள் ஆக முடியும்?" 
"சேநாதிபதி! வீண் பேச்சில் காலங்கடத்த நான் விரும்பவில்லை. அவன் என் சிநேகிதன் இல்லாவிட்டாலும் நன்றி என்பதாக ஒன்று இருக்கிறதல்லவா? வள்ளுவர் முதல் பெரியோர்கள் அனைவரும் சொல்லியிருக்கிறார்களே? 'சோழ குலத்தார் நன்றி மறவாதவர்கள்' என்ற புகழ் என்னால் கெட்டுப் போக விடமாட்டேன். இந்த விநாடியே புறப்பட்டுச் சென்று அந்தக் கப்பலைப் தேடிப்பிடிப்பேன்..." 
"எப்படிப் புறப்படுவீர்கள், எங்கே தேடுவீர்கள் இளவரசே!" 
"நீங்கள் வந்த படகில் ஏறிக்கொண்டு புறப்படுவேன்..." 
"முயலை வைத்துக் கொண்டு புலி வேட்டையாட முடியுமா? ஆழ்கடலில் செல்லும் மரக்கலத்தை இச்சிறிய படகில் ஏறித் துரத்திப் பிடிக்க முடியுமா? பிடித்த பிறகுதான் என்ன செய்வீர்கள்?" 
"படகில் ஏறிப்போவேன், படகு உடைந்தால் மரக்கட்டையைப் பிடித்து நீந்திக்கொண்டு போவேன். வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பல் ஏழு கடல்களுக்கு அப்பால் சென்றாலும் அதைத் துரத்திக் கொண்டு போய்ப் பிடிப்பேன். பிடித்த பிறகு என் நண்பனைக் காப்பாற்ற முடியாவிட்டால் நானும் அவனோடு உயிரையாவது விடுவேன்... படகுக்காரன் எங்கே?" 
இவ்விதம் சொல்லிக்கொண்டே இளவரசர் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தார். படகுக்காரனுடன் ஒரு பக்கமாக நின்று பூங்குழலி பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். அருகில் ஊமை மூதாட்டியும் நின்றாள். அவர்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்து போனார். 
சமீபத்தில் சென்றதும் பூங்குழலி கண்ணில் நீர் ததும்ப அப்படகுக்காரனுடன் ஆத்திரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் என்று தெரிந்தது. 
"ஆகா! இது என்ன? இன்னொரு உட்கலகமா?" என்றார் இளவரசர். 
படகுக்காரன் திடீர் என்று இளவரசர் காலில் விழுந்தான். "இளவரசே! தெரியாமல் பாதகம் செய்துவிட்டேன். பணத்தாசையால் செய்துவிட்டேன்; மன்னிக்க வேண்டும்!" என்று கதறினான். 
"இது என்ன?... பூங்குழலி! எல்லாருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறதே? நீயாவது விஷயம் என்னவென்று சொல்லக்கூடாதா?" 
"இளவரசே! இத்தனை நேரம் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லவில்லை. இவன் என் தமையன், தங்களைக் கொல்லுவதற்காக வந்த இரண்டு பாவிகளையும் இவன்தான் கோடிக்கரையிலிருந்து படகில் ஏற்றிக் கொண்டு வந்தான். அவர்கள் சொற்படியேதான் இவன் இதுவரை இங்கே காத்துக் கொண்டிருந்தான். அவர்களை இன்று காலையில் மறுபடியும் படகில் ஏற்றி நாம் பார்த்த கப்பலில் கொண்டு போய் விட்டானாம்! தங்கள் நண்பரும் அதிலேதான் ஏறியிருக்கிறார்..." என்றாள். 
"பிரபு! என்னை வெட்டிக்கொன்று விடுங்கள்! அவர்கள் அத்தகைய துஷ்டர்கள் என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன். என்னைத் தங்கள் கையாலேயே கொன்று விடுங்கள்!" என்றான் படகுக்காரன். 
"அப்பனே! இச்சமயம் உன் உயிர் எனக்கு விலை மதிப்பில்லாத பொருள். வா, போகலாம்! அந்தக் கப்பலிலேயே என்னையும் கொண்டுபோய் ஏற்றிவிடு. எனக்கு நீ செய்த கெடுதலுக்கு அதுதான் பரிகாரம். புறப்படு, போகலாம்!" என்றார் இளவரசர். 
கடற்கரையோரத்தில் சென்றதும் கரையில் கிடந்த படகைப் படகோட்டி தண்ணீரில் இழுத்து விட்டான். இளவரசர் கடலைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். 
"அதோ கப்பல் இன்னும் தெரிகிறது! பிடித்து விடலாம்!" என்றார். 
சேநாதிபதியும் தூரத்தில் தெரிந்த கப்பலைக் கூர்ந்து பார்த்தார். 
"இளவரசே! பழம் நழுவிப்பாலில் விழுந்தது போலாயிற்று!" என்றார். 
"என்ன என்ன? தங்களிடமிருந்து கூட நல்ல வார்த்தை வருகிறதே!" 
"நம் கண்ணுக்குத் தென்படுவது தாங்கள் நினைக்கிறபடி வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பல் அல்ல. பார்த்திபேந்திரனுடைய கப்பல். திரிகோண மலைப்பக்கமிருந்து வருகிறது. நாம் இருக்கும் திசையை நோக்கி வருகிறது. தெரியவில்லையா?" 
"ஆம், ஆம்! அப்படியானால் மிகவும் நல்லதாய்ப் போயிற்று. பார்த்திபேந்திரர் வேறு ஏதோ நோக்கத்துடன் வருகிறார். ஆயினும் நல்ல சமயத்தில் வருகிறார். சிங்கத்தைக் கொண்டே சிறுத்தையை வேட்டையாடலாம்!... ஆனால் அந்தக் கப்பல் இங்கே வரும் வரையில் நான் காத்திருக்கப் போவதில்லை. படகில் சிறிது தூரம் சென்று எதிர் கொள்கிறேன்..." 
"இளவரசே! தங்களுடன் படகில் வருவதற்கு..." 
"ஐயா நீங்கள் ஒருவரும் என்னுடன் வரவேண்டியதில்லை. இங்கேயே நின்றால் எனக்குப் பெரிய உதவிசெய்ததாக எண்ணிக்கொள்வேன்... திருமலை! உனக்குங் கூடத்தான் சொல்கிறேன். உனக்குத்தான் கடல் என்றால் தயக்கமாயிற்றே?" 
"ஆம், ஐயா! நானும் பின் தங்குவதாகவே இருந்தேன். இலங்கைத் தீவில் இருக்கும் வரையில் தங்களைப் பார்த்துக்கொள்ளும்படிதான் எனக்குக் கட்டளை. முதன் மந்திரி மதுரையில் இருக்கிறார். அவரிடம் போய் இங்கு நடந்தவற்றைச் சொல்ல வேண்டும்..." 
"அப்படியே செய்! பூங்குழலி! நீயும் இங்கே நிற்க வேண்டியதுதான். உன் தமையனைப் பற்றிக் கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ வந்த படகை எங்கேயோ விட்டிருப்பதாகச் சொன்னாயல்லவா? அதில் ஏறி இனி உன் வழியில் போகலாம். நீ எனக்குச் செய்த உதவியை என்றும் மறக்கமாட்டேன்... சேச்சே! கண்ணீரைத் துடைத்துக் கொள்! பார்க்கிறவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?" 
இவ்வாறு கூறிவிட்டு இளவரசர் ஊமை ராணியின் அருகில் சென்று அவளுடைய பாதத்தைத் தொட்டு வணங்கப் போனார். அந்த மூதாட்டி அவரை தடுத்து நிறுத்தி உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தாள். அடுத்த நிமிஷம் இளவரசர் கடலில் ஆயத்தமாக நின்ற படகில் பாய்ந்து ஏறிக் கொண்டார். கரையில் இருந்தவர்கள் படகைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள். 
இளவரசரும் போகின்ற படகிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லோரையும் பொதுவாகப் பார்த்தாலும் அவருடைய கண்கள் பூங்குழலியின் கண்ணீர் வழிந்த முகத்திலேயே நிலைத்து நின்றது. அதிசயம்! அதிசயம்! தூர விலகிப் போகப் போக, உருவங்கள் சிறியனவாக வேண்டுமல்லவா? கரையில் இருந்த மற்றவர்களின் உருவங்கள் சிறியனவாகித்தான் வந்தன. ஆனால் பூங்குழலியின் முகம் மட்டும் வரவரப் பெரிதாகிக் கொண்டேயிருந்தது. இளவரசரின் அருகில் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது. 
இளவரசர் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டார். கண்களை வேறுபக்கம் திருப்பினார். முதல் நாள் இரவு கண்ட கனவில் ஒரு நிகழ்ச்சி அவர் மனக்கண் முன்வந்தது. இளைய பிராட்டி குந்தவை, "தம்பி! உனக்காக இங்கே வானதி காத்திருக்கிறாள் என்பதை மறந்து விடாதே!" என்று கூறிய மொழிகள் கடல் அலைகளின் இரைச்சலுக்கிடையில் தெளிவாக அவருடைய காதில் கேட்டன.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel

Books related to பொன்னியின் செல்வன்


संत तुकाराम अभंग - संग्रह २
चंद्रकांता
रामचरितमानस
भारताचा शोध
वाचनस्तु
The Voyages and Adventures of Captain Hatteras
श्रीनारदपुराण - पूर्वभाग